நீட் போராட்டத்தின் போது வேலியே பயிரை மேய்ந்த வெட்கச்செயல்

  • IndiaGlitz, [Thursday,September 07 2017]

நீட் தேர்வு காரணமாக மருத்துவ கனவை இழந்த அரியலூர் அனிதா உயிரையே மாய்த்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் கல்லூரி மாணவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியும் போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கோவையில் நடந்த மாணவர்களின் போராட்டத்தின் போது ஒரு போலீஸ் அதிகாரி சக பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை மானபங்கப்படுத்தும் வகையில் நடந்துள்ளதாக தெரிய வருகிறது. இந்த சம்பவத்தை தேசிய ஊடகம் ஒன்று வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது.

ஒரு பெண்ணுக்கு மானபங்கம் ஏற்பட்டால் போலீசிடம் புகார் அளிக்கலாம், ஆனால் போலீசே மானபங்கம் செய்தால் யாரிடம் புகார் அளிப்பது? மேலும் உயரதிகாரி மீது புகார் மனு கொடுத்தால் என்ன நடக்கும்? என்பது அனைவருக்கும் தெரியும்.

வேலியே பயிரை மேய்ந்த கதைபோல், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ் அதிகாரியே பெண்ணுக்கு, அதிலும் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் யாரிடம் போய் முறையிடுவது என்றும், அந்த போலீஸ் அதிகாரியை விசாரணை செய்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என சமூக வலைத்தள பயனாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.