தர்பார்' படத்திற்காக ஒன்றுசேரும் இந்திய திரையுலகம்

  • IndiaGlitz, [Tuesday,November 05 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நவம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது புதிய அப்டேட்டாக நவம்பர் ஏழாம் தேதி மாலை 6 மணிக்கு தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்றும் இந்த போஸ்டரை தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் அந்தந்த மொழிகளில் மோஷன் போஸ்டரை வெளியிட உள்ளார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

எனவே தர்பார் படத்திற்காக ஒரே நாளில் ஒரே நேரத்தில் இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோஷன் போஸ்டரை வரவேற்க இந்தியா மட்டுமன்றி உலகெங்கிலுமுள்ள ரஜினி ரசிகர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.