பண மழையில் நனையும் கிரிக்கெட்டர்கள்! டாப் 10 லிஸ்ட்டில் உள்ள இந்தியர் யார் தெரியுமா?

உலக அளவில் டென்னிஸ் வீரர்களைக் காட்டிலும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் குறைவாகத்தான் வழங்கப் படுகிறது. மேலும் ஒரு கிரிக்கெட் வீரருக்கு அவரது சம்பளத்தைத் தவிர விளம்பரம் போன்ற பல்வேறு வழிகளிலும் வருமானம் வருகிறது. இப்படி இருக்கும்போது உலக அளவில் இந்த ஆண்டு அதிக சம்பளம் பெறும் கிரிக்கெட் வீரர்களின் டாப் 10 பட்டியல் வெளியாகி இருக்கிறது.

அந்தப் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த சுரேஷ் ரெய்னா, ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா. ரோஹித் சர்மா, தல தோனி, விராட் கோலி போன்ற வீரர்கள் இடம்பிடித்து உள்ளனர்.

அதிக வருமானம் பெறும் டாப் 10 லிஸ்டில் “சின்னத்தல“ என்று அன்போடு அழைக்கப்படும் “சுரேஷ் ரெய்னா“ 10 ஆவது இடத்தில் உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக தொடர்ந்து வலம் வருகிறார். இவருடைய ஆண்டு வருமானம் 22.34 கோடி என்ற தகவல் வெளியாகி இருக்கிறது

இந்த லிஸ்டில் 9 ஆவது இடத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளார். இவருடைய ஆண்டு வருமானம் 22.40 கோடி எனக் கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் 8 ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் இடம்பெற்றுள்ளார். இவரது வருமானம் 22.50 கோடியாக உள்ளது.

அடுத்து இந்த லிஸ்டில் 7 ஆவது இடத்தில் நம்ம இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா இடம்பெற்றுள்ளார். இவரது வருமானம் 31.65 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது. 6 ஆவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் இருக்கிறார். அவரது வருமானம் 55.86 கோடி. 5ஆவது இடத்தில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா இடம்பெற்றுள்ளார். இவரது வருமானம் 59.59 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து 4 ஆவது இடத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் இருக்கிறார். இவரது வருமானம் 60 கோடி. அடுத்து 3 ஆவது இடத்தில் இந்திய துணை கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் இவர் செயல்பட்டு வருகிறார். இவரது வருமானம் 74.49 கோடி.

அடுத்து 2 ஆவது இடத்தில் தல தோனி இடம்பெற்றுள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணியில் இருந்து தோனி விலகிவிட்டாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவரது ஆண்டு வருமானம் 108.29 கோடி எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. இந்த டாப் 10 லிஸ்டில் முதல் இடத்தை பிடித்து இருப்பது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவரது ஆண்டு வருமானம் 208.56 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி அதிக வருமானம் பெறும் டாப் 10 பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிகளவு இடம்பெற்றுள்ளனர். இதற்கு முக்கியமான காரணம் உலக அளவில் கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டாலும் ஆசியாவை பொறுத்தவரையில் கிரிக்கெட்டுக்குத்தான் அதிக மவுசு. அதுவும் இந்திய ரசிர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை எனும் அளவிற்கு கிரிக்கெட் அவர்களைக் கட்டிப்போட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.