நாளை டாஸ்மாக் மூடப்படும்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
- IndiaGlitz, [Saturday,March 21 2020]
கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வரும் 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை ஏற்படுத்த வேண்டுமென சமீபத்தில் பிரதமர் மோடி அவர்கள், நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து தமிழகத்தில் நாளை பேருந்துகள், ரயில்கள் ஓடாது என்றும் ஓட்டல்கள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
மேலும் சென்னை மெட்ரோ ரயில்களும் நாளை ஓடாது என்றும், பொதுமக்களின் சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப் போவதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் திரையரங்குகள், மால்கள் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அதிரடி அறிவிப்பாக நாளை டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்படுவதாக அமைச்சர் தங்கமணி அவர்கள் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் நாளை மக்கள் சுய ஊரடங்கை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் நாளை ஒருநாள் மட்டும் டாஸ்மாக்கை மூடாமல் இருப்பது மட்டுமின்றி கொரோனா பரபரப்பு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது