ரஜினிகாந்த் கட்சி அறிவிப்பு நாளை வெளியாகிறதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அரசியலில் இறங்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின்னர் அவர் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை ஆரம்பித்து அதற்கு மாவட்ட செயலாளர்கள் முதல் பூத் ஏஜெண்ட் வரை அனைத்து நிர்வாகிகளையும் அவர் தேர்வு செய்தார்

அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான பணிகள் 90% முடிந்து விட்டதாக ரஜினிகாந்த் ஏற்கனவே பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் நிலையில் அவர் விரைவில் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த ஐந்தாம் தேதி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மாவட்ட செயலாளர்கள் சந்திப்பில் தனக்கு முழு திருப்தி என்றும் இருப்பினும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாற்றம் என்றும் அது என்ன என்பது குறித்து பிறகு சொல்வதாகவும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் நாளை காலை 8 மணிக்கு சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மீண்டும் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்க இருக்கிறார். மேலும் நாளை அவர் மகளிர் நிர்வாகிகளையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாளை மாவட்ட செயலாளர்கள் சந்திப்புக்கு பின்னர் அரசியல் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகின்றன. குறிப்பாக ஏப்ரல் 14ஆம் தேதி ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது