ஏரியில் கொட்டப்படும் தக்காளிகள்....! விவசாயிகள் பெரும் வேதனை...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தக்காளியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், அதை பறித்து ஏரியில் கொட்டி வருகின்றனர் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள்.
ஓசூர்,தேன்கனிக்கோட்டை, சூளகிரி, கிருஷ்ணகிரி மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளியின் விலை கடும்வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தக்காளியை பயிரிட்டுள்ளனர் விவசாயிகள். விற்பனைக்காக கிருஷ்ணகிரி, ஓசூர் உழவர் சந்தை, ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட், ஓசூர் பத்தலப்பள்ளி சந்தை ஆகிய இடங்களுக்கு கொண்டுசென்று, ஏல முறையில் விற்பனை செய்து வருவார்கள். இங்கிருந்து கேரளா,கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதுடன், மொத்த வியாபாரிகளும் இங்கிருந்து கொள்முதல் செய்து வருகிறார்கள்.
நடப்பாண்டில் மழை இல்லாத காரணத்தாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்த காரணத்தாலும் தக்காளிக்கு விலை மதிப்பு அதிகமாகும் என எதிர்பார்த்திருந்தனர் விவசாயிகள். ஆனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.
தக்களிப்பழங்களை செடியில் விட்டுவிட முடியாது. பறிக்கவில்லையெனில் தோட்டம் முழுவதும் நாசமடைந்துவிடும் என்பதால், ஆட்களை விட்டு கூலி கொடுத்து பழங்களை பறிக்கின்றனர். மக்கள் ஒரு ரூபாய்க்கு கூட வாங்காததால், விரக்தி அடைந்த விவசாயிகள் தக்காளி பழங்களை ஏரிகளில் கொட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி விவசாயிகள் கூறியிருப்பதாவது,
கோடையின் தாக்கம், நிலத்தடி நீர்மட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை சமாளித்து, வறட்சியிலும் கடன் வாங்கி தக்காளி பயிரிட்டு இருந்தோம். சில மாதங்களுக்கு முன்பு கிலோவுக்கு ரூ.30,ரூ.40 என தக்காளி விற்கப்பட்ட நிலையில், தற்போது வெறும் 3 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர் வியாபாரிகள். இதனால் போக்குவரத்து செலவிற்கும், பறிக்கும் கூலிக்கும் கூட காசு கிடைப்பதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இன்னும் சில மாதங்களுக்கு தக்காளியின் விலை வீழ்ச்சியாகவே இருக்கும். உற்பத்தி குறையும் போது இதன் விலை அதிகரிக்கும். இதனால் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை ஆகியவற்றை மையமாகக்கொண்டு தக்காளி பழச்சாறு தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தால், விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். அரசு நெல்லை கொள்முதல் செய்வதுபோல, தக்காளிக்கும் 20ரூபாய் என மதிப்பிட்டு கொள்முதல் செய்தால், பெரிய வருவாய் இல்லாவிட்டாலும், விவசாயிகள் இழப்பை சந்திக்காமல் இருப்போம். இதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் தக்காளி பயிரிட்டவர்களுக்கு மட்டும் ஏக்கருக்கு 40 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments