பிஞ்சு குழந்தைகளைத் தாக்கும் தக்காளி வைரஸ் நோய்… தமிழகத்திலும் பரவலா?
- IndiaGlitz, [Sunday,May 08 2022]
கேரளாவில் 85 குழந்தைகள் புதியவகை வைரஸ் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்தப் புதிய வகை வைரஸ் தாக்கம் காரணமாகத் தமிழகத்திலும் இந்த நோய் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட 85 குழந்தைக்ள், தக்காளி காய்ச்சல் எனும் புதிய வகை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு காய்ச்சல், உடல்வலி, கை கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொற்றும் தன்மையுள்ள இந்த நோய் பரவலின் காரணமாக ஆரியக்காவு, நெடுவதூர் போன்ற பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்புதிய நோய் பாதிப்பு குறித்து பேசியுள்ள மருத்துவர்கள் கொசுக்கடியால் உருவாகும் சிக்கன்குனியாவின் பின்விளைவாக இது இருக்கலாம் என்று கூறியதோடு உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலும் தக்காளி காய்ச்சல் பரவல் இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இந்தப் புதிய வைரஸ் நோய் சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் புதிய வகை தொற்று. நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுவினால் இது பரவுகிறது. தோலில் சிவப்பு நிற புள்ளிகள் தென்படுவதால் இதற்கு தக்காளி வைரஸ் என்று பெயர். இப்புதிய வைரஸ் நோய் பாதிப்பிற்கும் தக்காளி பழத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியதோடு தமிழகத்தில் இந்நோய்க்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.