தேசிய விருதை புறக்கணித்த 'டூலெட்' இயக்குனர் செழியன்: காரணம் என்ன?
- IndiaGlitz, [Thursday,May 03 2018]
சமீபத்தில் தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த ஆண்டு விருது அறிவிப்பில் தமிழக திரைப்பட துறை புறக்கணிக்கப்பட்டதாகவும், தமிழுக்கு வெறும் நான்கு விருதுகள் மட்டுமே கிடைத்ததால் தமிழ் திரையுலகம் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. சிறந்த தமிழ் மொழி படமாக 'டூலெட்' படமும், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பின்னணி இசையமைப்பாளர் விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மானும், சிறந்த பாடகியாக 'காற்று வெளியிடை படத்தில் பாடிய சாஷா திரிபாதியும் இந்த ஆண்டுக்கான விருதினை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் இவ்வாண்டு தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், வெறும் 11 பேர்களுக்கு மட்டுமே விருது வழங்குவார் என்றும் பிற கலைஞர்களுக்கு குடியரசு தலைவருக்கு பதிலாக வேறொருவர் விருது வழங்குவார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய விருது வழங்கும் விழாவை புறக்கணிக்க சுமார் 60க்கும் மேற்பட்டோர் முடிவு செய்திருப்பதாகவும், அவர்களில் 'டூலெட்' படத்தின் இயக்குனர் செழியனும் ஒருவர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. தேசிய விருது பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் குடியரசு தலைவர் தனது கையால் விருது அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.