டோக்கியோ ஒலிம்பிக்கில் முதலிடம் பிடித்த அமெரிக்கா… இந்தியா பெற்ற இடம்…!
- IndiaGlitz, [Monday,August 09 2021] Sports News
32 ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் கடந்த ஜுலை 23 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வந்தது. 16 நாட்கள் விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்தப் போட்டியின் நிறைவுவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடம் பிடித்திருக்கிறது. இரண்டாவது இடத்தை சீனா பெற்றுள்ளது. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா முதல்முறையாக 7 பதக்கங்களைப் பெற்று 48 ஆவது இடத்தைப் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா பேரிடரால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 326 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 33 விளையாட்டுகளுக்கான 339 போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் மட்டும் அமெரிக்கா 3 தங்கப் பதக்கத்தை பெற்று பதக்கப் பட்டியலில் புது சாதனையை படைத்தது. இதனால் 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலத்துடன் 113 பதக்கங்களைப் பெற்ற அமெரிக்கா பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பெற்றது.
அடுத்ததாக சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலத்துடன் மொத்தமாக 88 பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்தப் பட்டியலில் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 58 பதக்கங்களைப் பெற்ற ஜப்பான் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
டோக்கியோ ஒலிம்பிக்கை பொறுத்தவரை இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களைப் பெற்று ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக அதிகப் பதக்கங்களை குவித்துள்ளது. இதனால் 48 ஆவது இடத்தைப் பிடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் பிரிட்டிஷ் 22 பதக்கங்களையும் ரஷ்யா 20 பதக்கங்களையும் ஆஸ்திரேலியா 17 பதக்கங்களையும் வென்றன. மேலும் நெதர்லாந்து, பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகள் தலா 10 பதக்கங்களையும் கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் 7 பதக்கங்களையும் வென்றுள்ளது.
32 ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த ஒலிம்பிக் போட்டியானது வரும் 2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஒலிம்பிக் பதக்கங்கள்
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்ற நிலையில் ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிகப் பதக்கங்களை குவித்துள்ளதாகப் பராட்டப்படுகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதங்களையும் ரியோ ஒலிம்பிக்கில் 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தமாகவே 2 பதக்கங்களை மட்டுமே பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய 1 தங்கம் உட்பட 7 பதக்கங்களை வென்றுள்ளது. இதனால் பதக்கப் பட்டியலில் 48 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா- தங்கம்
மகளிர் பளு தூக்கும் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு - வெள்ளி
ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் பிரிவில் ரவி குமார் தாஹியா- வெள்ளி
ஆண்கள் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா – வெண்கலம்
மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து- வெண்கலம்
பெண்கள் குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா- வெண்கலம்.
41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஹாக்கி ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தை குவித்தது.