இந்திய வரலாற்றில் இருண்ட நாள் இன்று ... மீளா கறுப்புக்குள் புகுந்துகொண்ட ஜுன் 25 பற்றி சில சுவாரசிய தகவல்கள்!!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய வரலாற்றில் ஒரு இருண்ட காலக் கட்டமாக எமெர்ஜென்சி நிலை அறியப் படுகிறது. இந்நிலைப்பாடு அரசியல் மட்டத்தில் பெரிய குறைபாடாகக் குற்றம் சாட்டப் படுகிறது. உண்மையில் இந்த நிலைப்பாடு குறித்து பொதுமக்கள், சாரணமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இதுவரை எந்தப் பத்திரிக்கையும் பதிவு செய்ததில்லை. காரணம் இந்நிலைப்பாட்டில் ஜனநாயகத் தன்மைப் பொருந்திய குணாம்சங்கள் இல்லை என்பதே பலரின் பதிலாகவும் இருக்கிறது. அப்படி இந்திய வரலாற்றையே புரட்டிப் போட்ட ஒரு சட்ட அறிக்கை எப்படி அமலாக்கப் பட்டது என்பதைக் குறித்த நிகழ்வை பிபிசி செய்தியாக வெளியிட்டு இருக்கிறது.
எமெர்ஜெனிசியை அறிவிப்பதற்கு முன்னர் மத்திய அமைச்சரவையையும் கூட்டி இருக்கிறார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. ஆனால் எவரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. அன்றைய சட்ட அமைச்சராக இருந்த H.R கோகலேவிடம் எமெஜெர்சியைக் குறித்து எந்த ஆலோசனையும் கேட்கப் படவில்லை. ஆனால் பல மாதங்களுக்கு அவசர நிலை பிரகனடத்தை பிறப்பித்து இந்தியாவை கட்டுக் கோப்பாக வைத்திருந்தார் இந்திரா காந்தி. இதன் பின்னணியில் பலர் கைது செய்யப் பட்டனர். 1975 ஜுன் 25 ஆம் தேதி அன்றைய மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்த சித்தார்த் சங்கர் ராய் என்பவரைத் தொடர்பு கொண்ட இந்திரா காந்தி அவரை நேரில் வரவழைக்கிறார். பிரதமர் இந்திரா காந்தியின் வீடு சப்தர்ஜங் சாலையில் இருக்கிறது. தன்னுடைய பெரிய மேஜையில் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டை வைத்துக் கொண்டு பரபரப்பாகக் காணப்படுகிறார் இந்திராகாந்தி.
அன்றைக்கு குஜராத் மற்றும் பீகார் சட்ட சபைகள் கலைக்கப்பட்டு எதிர்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். மத்திய அரசே கவிழ்க்கப்பட்டு விடுமோ என்ற குழப்பம் ஒருபக்கம் நீடித்து வருகிறது. இந்நிலையில் சித்தார்த் இந்திரா காந்தியை சந்திக்கிறார். பேச ஆரத்பித்த இந்திரா, அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் கொலை செய்யப்போகும் பட்டியலில் தன்னுடைய பெயர் முதலில் இருப்பதாகக் கூறுகிறார். சிலி அதிபருக்கு ஏற்பட்ட நிலைமை எனக்கும் ஏற்படுமோ என்று அச்சப் படுகிறார். அன்றைக்கு தனக்கு ஏற்பட்ட உணர்வு குறித்து பின்னாளில் நினைவுகூர்ந்த இந்திராக காந்தி தன்னுடைய புத்தகத்தில் இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் தேவை என்று எழுதுகிறார்.
உடனே சித்தார்த்தை பார்த்து என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் என்று கேட்கிறார். சட்டப்படி என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்துச் சொல்வதாகக் கூறுகிறார் சித்தார்த். சிந்தியுங்கள், ஆனால் கால அவகாசம் இல்லை எனவும் அழுத்தம் கொடுக்கிறார் இந்திரா. பிரதமர் வீட்டில் இருந்து திரும்பிய சித்தார்த் திரும்பவும் மாலை 3.30 மணிக்கு இந்திராவை சந்திக்க செல்கிறார். அப்போது இந்திய அரசியலமைப்பின் சட்டம் 352 ஆவது பிரிவைப் பயன்படுத்தி இந்தியாவில் நெருக்கடி நிலைமையை அமல்படுத்தலாம் எனக் கூறுகிறார் சித்தார்த். இந்த முடிவை எடுக்கும் போது மத்திய அமைச்சரவை கூட்டம் கூட்டப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
எப்படி அமல்படுத்துவது என்று கேட்ட இந்திராவிடம் குடியரசு தலைவரிடம் அவரச நிலைக் குறித்து விளக்கம் அளிப்போம் எனக் கூறுகிறார். சித்தார்த். உடனே இந்திரா நீங்களே சொல்லுங்கள் எனக் கூற, அதற்கு மறுப்பு தெரிவித்த சித்தார்த் நான் மேற்கு வங்க முதலமைச்சர். பிரதமர் இல்லை. நீங்கள்தான் சொல்ல வேண்டும் எனக் கூற. பிறகு குடியரசு தலைவரைச் சந்திக்க உடன் வருவதாக மட்டும் ஒப்புக் கொண்டார். பிரதமரின் செயலாளராக இருந்த R.K. தர் க்கு விஷயம் சுருக்கமாகச் சொல்லப் படுகிறது. நாட்டில் அவசர நிலை பிரகடனத்தைக் கொண்டு வருவதற்கான ஆணை தட்டச்சு செய்யப் படுகிறது. உரிய கோப்புகளை இணைத்து எடுத்துக் கொண்டு பிரதமரின் பிரதிநிதியாக தனிப்பட்ட பாதுகாவலர் R.K. தவண் குடியரசு தலைவர் அலுவலகம் செல்கிறார்.
அன்று மாலையுடன் வானம் இருண்டு போனதாக இந்தியப் பத்திரிக்கைகள் பின்னாட்களில் குற்றம் சாட்டுகின்றன. குடியரசு தலைவராக இருந்த ஃப்க்ருதீன் அலியிடம் கோப்பு ஒப்படைக்கப் படுகிறது. பிறகு காலை 6 மணிக்கு டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று உத்தரவு பறக்கிறது. காலை 5 மணிக்கு அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு 6 மணிக்கு வரவேண்டும் என தகவல் சொல்ல சொல்கிறார் இந்திரா. இந்த தகவலை சொல்லும் போதே நள்ளிரவு ஆகிறது. பிரதமரும் சித்தார்த்தும் இணைந்து அந்த நள்ளிரவில் அவசர நிலை பிரகடனத்தை நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் அறிக்கையை தயார் செய்கின்றனர்.
இதற்கு நடுவில் இந்திராவின் மகன் சஞ்சய் காந்தி மற்றும் ஓம் மெஹ்தா இருவரும் சேர்ந்து இந்தியாவில் கைது செய்ய வேண்டியவர்களின் பட்டியல்களை தயார் செய்கின்றனர். மேலும் பத்திரிக்கை தணிக்கை, பத்திரிக்கைகளுக்கு மின்சாரத்தை தடை செய்வது, நீதிமன்றங்களை ரத்து செய்வது குறித்த ஆணைகளும் தயாரிக்கப் படுகிறது. இந்த விவரங்கள் எல்லாம் சித்தார்த் ராய்க்கு தெரியாமல் இருக்கிறது. அறிக்கையை தயார் செய்து கொடுத்து விட்டு சித்தார்த் ராய் கிளம்புகிறார். அப்போது விவரம் தெரிய வர இந்திராவை சந்திக்க வேண்டும் என சித்தார்த் ராய் பாதுகாலவரிடம் கேட்கிறார். ஆனால் பிரதமர் உறங்க சென்று விட்டதாக தனிப்பட்ட பாதுகாவலரான R.K. தவண் கூறுகிறார். அதையடுத்து பன்சாலால், “பத்திரிக்கை தணிக்கை என்பது இந்திராவின் விருப்பம். ஆனால் மின்சாரம் தடைசெய்வது மற்றும் நீதி மன்றங்களை ரத்து செய்வது எல்லாம் சஞ்சய் காந்தியின் நடவடிக்கை என பன்சாலால் விளக்கம் அளிக்கிறார்.
அடுத்த நாள் காலை அமைச்சரவை கூட்டம் கூட்டப்படுவதற்கு முன்பே நள்ளிரவில் ஜெய்பிரகாஷ் நாராயணன் மற்றும் மொராஜி தேசாய் இருவரும் கைது செய்யப் படுகிறார்கள். ஆனால் காமராஜ், கங்காதர் சின்ஹா, எஸ்.எம்.ஜோஷி போன்றோரை கைது செய்ய இந்திரா ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவரங்களை எல்லாம் செயலாராக பணியாற்றிய பி.என். தர் பின்னாட்களில் எமெர்ஜென்சி அண்ட் இன்டியன் டெமாக்ரஜி என்ற புத்தகத்தில் பதிவு செய்கிறார். நள்ளிரவிலேயே பல பத்திரிக்கை நிறுவனங்களுக்கு மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதனால் ஜுன் 26 ஆம் தேதி இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் ஸ்டேட்மேன் என்ற இரு பத்திரிக்கைகள் மட்டுமெ வெளிவருகின்றன.
அமைச்சரவை சரியாக காலை 6 மணிக்கு கூட்டப் படுகிறது. 8 அமைச்சர்கள் மற்றும் 5 இணை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். 9 அமைச்சர்கள் டெல்லியில் இல்லாததால் வருகை ரத்து ஆகிறது. பின்பு நாட்டில் உள்ள நெருக்கடி நிலைமைகளை ஒன்றொன்றாக இந்திரா பட்டியல் இடுகிறார். அவசர நிலை பிரகடனம் குறித்து இந்திரா விளக்கம் அளிக்கிறார். இதைக்கேட்ட அமைச்சர்கள் எல்லாம் அமைதியாக இருக்கின்றனர். யாரும் ஒரு கேள்வியும் கேட்கவில்லை. அன்றைக்குப் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த ஸ்வான் சிங் ஒரே ஒரு கேள்வி கேட்கிறார். அதற்கு இந்திரா அளித்த பதிலோடு எமெர்ஜென்சிக்கு ஒப்புதல் அளிக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வெறுமனே அரை மணி நேரத்தில் முடிந்து விடுகிறது.
இப்படி போடப்பட்ட எமெர்ஜென்சியை பிரதமர் இந்திரா காந்தி பல மாதங்களுக்குத் தொடங்குகிறார். தனது இரும்பு கரங்களால் நாட்டை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறார். இந்த நிகழ்வுதான் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் என்றைக்கு அழிக்க முடியாத கரும்புள்ளியாக மாறிவிடுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout