சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் இன்று...
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்று விரும்பிய இந்தியாவின் முதல் தலைவர் பண்டித ஜவஹர்லார் நேரு. தற்போது ”சீனாவுக்கு எதிரான போரில் தோற்றவர், காஷ்மீர் விவகாரத்தை சரியாக கையாளத் தெரியாதவர், அதோடு இப்போதைய இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான சிக்கல்களுக்கு காரணமானவர்” எனப் பல்வேறு விமர்சனங்கள் அவர்மீது வீசப்பட்டாலும் அவரின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒரு சுதந்திரமான சோசலிச உணர்வு இருந்தது என்பதை எவரும் மறுத்து விட முடியாது.
ஒரு மாபெரும் தலைவனின் நினைவு நாளில் அவரது அரசியலை பாதையை பற்றி பேசுவதைவிட அவருடைய தியாகத்தை நினைத்து பார்ப்பதே சிறந்ததாக இருக்க முடியும். சுதந்திர இந்தியாவின் முதல் தலைவர் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறோம். ஆனால் இவரின் செயல்கள் எப்படி பட்டது என்றால் மாபெரும் செல்வ சீமானுக்கு மகனாக பிறந்த இவர் காந்தியோடு விடுதலைப் போரில் கலந்து கொண்டு 3,259 நாட்கள் சிறையில் இருந்து இருக்கிறார். பெற்ற பிள்ளையில் இளம் வயது முகத்தை இவர் பார்த்ததே இல்லை. பேரன் பிறந்த போது மன்னிப்புக் கேட்டால் விட்டு விடுகிறோம் என பிரிட்டிஷ் இந்தியா கூறிய போது அந்த விடுதலையை உதறித்தள்ளியவர். ஒரு அப்பா தன்னுடைய சொந்த மகளோடு நேரடியாகப் பேச முடியாமல் கடிதத்தில் மட்டுமே முகம் காட்டிய ஒரு நபராகவும் இவர் இருந்திருக்கிறார்.
சுதந்திர இந்தியாவில் 17 வருடங்கள் பிரதமராக பொறுப்பு வகித்து இருக்கிறார். அரசியல் கொள்கைகள், பொருளாதாரம், நிர்வாகம் போன்ற அனைத்திலும் ஜனநாயகத் தன்மை இருக்க வேண்டும் என விரும்பினார். உலகின் பல நாடுகள் சுதந்திரத்திற்குப் பின்பு ஜனநாயகக் கொள்கைளை காற்றில் பறக்கவிட்டு விட்டன. இந்தியாவில் இன்னும் ஜனநாயகம் என்ற சொல் புழக்கத்தில் இருப்பதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. டாக்டர் அம்பேத்கர் இந்துக்களுக்கான பொது சிவில் சட்டத்தை முறைப்படுத்த முடியாமல் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு கிளம்பினார். அந்த சட்டத்தை சிறு சிறு வடிவங்களாக மாற்றி அமல்படுத்திய பெருமை இவரையே சாரும். இந்திய அரசியலில் மத வாதம் கலந்து விடக்கூடாது என மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட்டார். தனது ஆட்சிக் காலத்தில் மதத் தலைவர்கள் யாரையும் இவர் சந்திக்கவே இல்லை. கோவில்களுக்கும் சென்றதே இல்லை.
சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற உணர்வு இவரிடம் மேலிட்டே காணப்பட்டது. தன்னை எப்போதும் ஒரு ஜனநாயக வாதியாக அடையாளப் படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டினார். இந்தியாவில் யார் வேண்டுமானாலும் இவரை கிண்டல் செய்து கார்டூர் கூட வரையலாம். அதையும் இவர் ரசித்து இருக்கிறார். இளம் வயதில் இவருடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத போது இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு தனி ரயில் வைத்து அழைத்துச் செல்லும் அளவிற்கு செல்வ சீமானின் வீட்டில் பிறந்த இவர் பிரதமரான பின்பு, ரேஷன் கடையின் வரிசையில் நின்று வீட்டுப் பொருளை வாங்கிச் சென்றிருக்கிறார். ஒட்டுப்போட்ட கோட்டைப் போட்டுக் கொண்டு அதன் மூலம் காசை மிச்சம் பிடித்து இருக்கிறார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தென்னிந்தியாவில் வலுத்தபோது அவர்களுக்கு எப்போது இந்தி தேவைப்படுகிறதோ அப்போது கற்றுக் கொள்ளட்டும் எனப் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்து இருக்கிறார். இவருடைய ஆட்சிக்காலத்தில் தான் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அதிக நேரம் விவாதம் நடத்தப்பட்டு இருக்கின்றது.
சுதந்திர இந்தியாவின் விவசாயம், நீர்ப்பாசானம், அணைக்கட்டு, கல்வி, சுகாதாரம், நிலப்பகிர்வு எனப் பல வழிமுறைகளிலும் திட்டத்தை வகுத்துக் கொடுத்து இருக்கிறார். அதோடு உலக நாடுகளுக்கே பஞ்சசீலக் கொள்ளையையும் வகுத்துக் கொடுத்து இருக்கிறார். இந்திய மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கு மக்களை நேரடியாகச் சந்தித்து ஓட்டுப் போடுவதன் அவசியத்தை வலியுறுத்திய முதல் பிரதமர் இவர்தான். தனது 17 ஆண்டுகால ஆட்சி சாதனைகளைப் பற்றி கேட்டபோது அதற்கு நேரு “என்னுடைய அழுத்தமான சுவடாக ஜனநாயகம் மட்டுமே இருக்கும்” என்று கூறியிக்கிறார். ஒரு மாபெரும் ஜனநாயகவாதியை ஜனநாயகத்தன்மையோடு நினைத்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments