வந்தாரை வாழ வைக்கும் சென்னை: சென்னை தின சிறப்பு கட்டுரை
Send us your feedback to audioarticles@vaarta.com
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது தெரிந்ததே. அதேபோல் தமிழகத்தின் உள் மாவட்ட மக்களை குறிப்பாக தென்மாவட்ட மக்களை வாழ வைக்கும் தாய் வீடாக சென்னை இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இளைஞர்கள் பட்டப்படிப்பை முடித்துவிட்டால் உடனே வேலை தேட வேண்டும் என்றால் அவர்களுக்கு ஞாபகம் வருவது சென்னை தான். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வசதியையும் கொடுத்து அவர்கள் தங்களுடைய சொந்த ஊர் சென்னை என்று சொல்லும் அளவுக்கு சென்னை அவர்களை மாற்றிவிடும். அதுதான் சென்னையின் மேஜிக்.
கொரோனா பரவல் காரணமாக சென்னையை விட்டு ஆயிரக்கணக்கானோர் வெளியேறினாலும் கொரோனா பிரச்சனை முடிந்தவுடன் சுவற்றில் அடித்த பந்துபோல் அவர்கள் அனைவரும் மீண்டும் சென்னைக்கு வருவது உறுதி. ஒவ்வொரு தமிழக இளைஞர்களுக்கும் முகவரியாய் இருந்து வருவது சென்னை என்பதும், சென்னையை நம்பினார் கைவிடப்படார் என்பது தான் உண்மையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று சென்னையின் 381வது தினம் கொண்டாடப்படும் நிலையில் சென்னையை சொந்த ஊராக கொண்டவர்களுக்கும், வந்த ஊராக கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.
சென்னை தினக் கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் சிறப்பை உணர்த்தியவர்கள் சென்னை நகரின் வரலாற்று அறிஞர் எஸ். முத்தையா, பத்திரிகையாளர்கள் சசி நாயர் மற்றும் வின்சென்ட் டி சோஸா ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்குப் பின்னர் ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சுசிலா ரவீந்திரநாத், ஆர். ரேவதி, வி. ஸ்ரீராம் ஆகியோர் சென்னை தினக் கொண்டாட்டத்தினை சென்னை வாரக் கொண்டாட்டமாக மாற்றினார்கள்.
சென்னை நகரத்தின் பிறந்தநாள் என்று ஒரு நாளை குறிப்பிட வேண்டும் என்று முடிவு செய்த 'மெட்ராஸ் டே' குழுவினர், தற்போது புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தின் ஒரு சிறுபகுதியை, அன்றைய விஜயநகர நாயக்கர்களிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனி முறைப்படி 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம்தேதி வாங்கியது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்படுவதால், அந்த தினத்தை சென்னை தினமாக அனுசரிக்கலாம் என்று முடிவு செய்ததாக தெரிவிக்கின்றனர். இருப்பினும் சென்னை நகரம் கிழக்கிந்திய கம்பெனியின் வருகையில் இருந்து தொடங்கியது என்று முடிவு செய்யக் கூடாது என்று வாதாடுபவர்களும் உண்டு.
ஆங்கிலேயருக்கு முந்தைய காலத்திலேயே தமிழர்கள் இந்த நகரத்தில் வளமுடன் வாழ்ந்த வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்றும் கூறப்படுகிறது. கல்வெட்டு ஆராய்ச்சியாளர் மற்றும் வரலாற்றுத் துறை பேராசிரியர் ராஜவேலு, சென்னை நகரத்தில் பழமையான கோயில்களான திருவொற்றியூர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருமுல்லைவாயில் உள்ளிட்ட கோயில்கள் பழமையான தலங்கள் என்பதை குறிப்பிடுகின்றனர். அதாவது, 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கோயில்களைக் கொண்டுள்ளது என்பதால், இந்த நகரம் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னதாக தோன்றிய நகரம் என்று கூறுவதையும் மறுக்க முடியாது
தற்போதைய எழும்பூர், சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கனின் கல்வெட்டுகளில் எழுமூர் நாடு என்று இருந்ததாகவும், 'சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, மாதவரம், கோயம்பேடு, தாம்பரம் போன்ற பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி கால் பதிப்பதற்கு முன்பே 12 -13ம் நுற்றாண்டுகளில் பிரசித்தி பெற்ற கிராமங்களாக இருந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலேயே நகர எல்லைக்குள் கிண்டி தேசிய பூங்கா என்ற பூங்கா உள்ள நகரம் சென்னை மட்டும் தான். இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஆங்கிலேயே ரெஜிமென்ட் சென்னையில் எழுந்தது தான். இப்பொழுது இருக்கும் ராணுவத்தின் ரெஜிமென்ட்களில் மூத்த ரெஜிமென்ட் மெட்ராஸ் ரெஜிமன்ட் தான். இந்தியாவின் முதல் ரேடியோ சேவை சென்னையில் தொடங்கியது தான். பிரசிடன்சி ரேடியோ க்ளப் என்கிற கிருஷ்ணஸ்வாமி என்பவரால் தொடங்கப்பட்ட ரேடியோ சர்வீஸ் தொடங்கிய ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தான் அரசே ரேடியோ சேவையை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவிலேயே முதல் கண் மருத்துவமனை தொடங்கப்பட்டதும் சென்னையில் தான். Madras Eye Infirmary என்று பெயர்கொண்ட அது உருவான வருடம் 1819. இந்தியாவின் மிக பழமையான பொறியியல் கல்விக்கூடம் கிண்டி பொறியியல் கல்லூரி தான். இந்தியாவில் மெக்கானிகல், எலெக்ட்ரிகல் ஆகிய துறைகளில் பொறியியல் பாடத்தை முதன் முதலில் ஆரம்பித்தது இந்த கல்லூரியில் தான் என்பதும் சென்னையின் மேலும் ஒரு சிறப்பு ஆகும்.
இந்தியாவின் முதல் கார்பரேசன் சென்னை கார்பரேசன் தான் என்பது மட்டுமின்றி உலகிலேயே இரண்டாவது பழமையான கார்பரேசன் சென்னை கார்ப்பரேசன் தான். ரிப்பன் என்பவர் சென்னையை கார்ப்பரேசனாக அறிவித்ததால் அவர் பெயரால் எழுந்தது தான் ரிப்பன் கட்டிடம் என்ற சென்னை மாநகராட்சி கட்டிடம்.
இன்றொடு சென்னைக்கு வயசு 381. இந்த நாளை சென்னை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout