இன்று மட்டும் பிற்பகல் 3 மணி வரை கடைகள் செயல்படும்: சென்னை மாநகராட்சி
- IndiaGlitz, [Saturday,April 25 2020]
சென்னை, மதுரை, கோவை உள்பட 5 நகரங்களில் நாளை முதல் 29ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் 26 வரை 29 வரை அத்தியாவசிய தேவைக்குரிய கடைகள் கூட நான்கு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இன்று காலை முதலே பொதுமக்கள் காய்கறி, மளிகைக்கடைகளில் குவிந்துள்ளனர். ஒருசில இடங்களில் சமூக விலகலைக்கூட பின்பற்றாமல் பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்று ஒருநாள் மட்டும் மாலை 6 மணி வரை கடைகள் திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் இன்று மட்டும் 2 மணி நேரம் கூடுதலாக அதாவது பிற்பகல் 3 மணி வரை கடைகளை திறந்து வைத்திருக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. சென்னை மட்டுமின்றி கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் இன்று மட்டும் பிற்பகல் 3 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எனவே சென்னை உள்பட 5 நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் நான்கு நாட்களுக்கு தேவையான மளிகை, காய்கறி ஆகியவறை மதியம் 3 மணிக்குள் வாங்கி கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.