மரக்கன்று நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய பழங்குடி மக்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மாரடைப்புக் காரணமாக நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உயிரிழப்பை ஒட்டி திரையுலகினர், ரசிகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக அக்கறை சார்ந்து யோசிக்கும் பலரும் பெரும் வருத்தத்தை வெளியிட்டு வருகின்றனர். மேலும் அவரது சுற்றுச்சூழல், சமூக விழிப்புணர்வு சார்ந்த கருத்துகள் குறித்தும் ஊடகங்கள் தொடர்ந்து பேசி வருகின்றன.
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தின் பாகல்கோடு பகுதியில் வசிக்கும் தோடர் இன மக்கள் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தற்போது மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தி உள்ளனர். மேலும் நடிகர் விவேக்கின் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில் நீலகிரி பகுதியில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்போவதாகவும் தெரிவித்து உள்ளனர்.
சுற்றுச்சூழல் விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் விவேக் 10 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் ஒன்றை தமிழகம் முழுவதும் தொடர்ந்து செயல்படுத்தி வந்தார். அந்த வகையில் சுற்றுச்சூல் தொடர்பான விஷயங்களில் நீலகிரி மாவட்டத்தின் முக்கியப் பங்கையும் அவர் நன்கு உணர்ந்து இருந்தார். அதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு அங்குள்ள பல்வேறு பகுதி மாணவர்களை ஒன்றிணைந்து மரக்கன்று நடுதல் விழாவை நடத்தியதோடு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செய்தார்.
மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டும் நீலகிரியின் எல்லநள்ளி பகுதியில் தூய்மை பணிகளை ஒருங்கிணைத்து செய்ததோடு ஹெல்மெட் அணிதல் குறித்த அவசியத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார். இப்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற மரம் நடுதல் நிகழ்வினை தொடர்ந்து ஒருங்கிணைந்து நடத்திய விவேக் புதுக்கோட்டையில் புதிய முறையில் மரக்கன்று நடப்பட்டு இருந்ததை அறிந்து கடந்த 2018 ஆம் ஆண்டு நேரிலேயே சென்று வாழ்த்தியும் இருக்கிறார்.
இந்நிலையில் சுற்றுச்சூழலை வளப்படுத்த மரக்கன்று நடுதல், பொது சுகாதாரம், சாலை பாதுகாப்பு குறித்த அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்திய அவரது இறப்புக்கு தோடர் இன மக்கள் மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தி இருப்பது தற்போது தனிக்கவனம் பெற்று இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments