12ஆம் வகுப்பு படித்த இளைஞர் ஆன்லைனில் ரூ.5 கோடி மோசடி செய்தது எப்படி? திடுக்கிடும் தகவல்
- IndiaGlitz, [Sunday,July 04 2021]
12ஆம் வகுப்பு மட்டுமே படித்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் மூலம் ரூபாய் ஐந்து கோடிக்கு மேல் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அகமதாபாத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் 21 வயது மகன் ஹர்ஷவர்தன் பார்மர். இவர் திடீரென ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாகவும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பரிவர்த்தனை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன. அந்த இளைஞனின் நடவடிக்கைகளைப் பார்த்து சந்தேகப்பட்ட காவல்துறையினர் இளைஞனை கைது செய்து விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன
ஹர்ஷவர்தனுகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்தபா என்பவர் அறிமுகமாகியதாகவும்,அவரின் மூலம் ரஷ்யாவில் உள்ள ஹேக்கர்கள் தொடர்பு கிடைத்ததாகவும் அந்தத் தொடர்பின் மூலம் உலகின் 40 நாடுகளில் உள்ள சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் மோசடியாக பல ஆடம்பர பொருட்களை வாங்கியதாகவும் தெரிகிறது
இதற்காக ஒடிபி தேவைப்படாத நாடுகளிலுள்ள வாடிக்கையாளர்களை தேர்வு செய்து, அவர்களுடைய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டில் இருந்து ஆடம்பரமான பொருட்களை வாங்கியதாக விசாரணையில் தெரியவந்தது. இதற்காக ஹர்ஷவர்தன், ரஷ்ய ஹேக்கர்களுக்கு 10 டாலர் முதல் 100 டாலர் வரை கொடுத்துள்ளதாகவும் வாக்குமூலத்தில் தெரியவந்து உள்ளது. வெறும் 12ஆம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு இளைஞர் 40 நாடுகளைச் சேர்ந்த 25,000 பேர்களை ஏமாற்றி ஐந்து கோடிக்கு மேல் மோசடி செய்த சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.