சர்வதேச வீராங்கனைகளை பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்ற திருச்சி பெண்... குவியும் பாராட்டு!
- IndiaGlitz, [Friday,March 19 2021]
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 15 ஆம் தேதி முதல் தேசிய தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 20 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். அதில் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தனலட்சுமி எனும் வீராங்கனை பெண்கள் பிரிவில் 100 மீட்டர் தடகளப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் இந்த 100 மீட்டரை அவர் வெறும் 11.39 வினாடிகளில் கடந்தார் என்பதும் இந்தப் போட்டியில் சர்வதேச வீராங்கனைகளான டூட்டி சந்த், ஹீமா தாஸ் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி தனலட்சுமி இந்த சாதனையை புரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள குண்டூர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி அங்குள்ள சீதாலட்சுமி கல்லூரியில் பயின்றுள்ளார். தன்னுடைய கல்லூரி காலங்களில் பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் பங்கேற்ற இவர் தற்போது தேசிய அளவில் தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.
இதன்மூலம் தனலட்சுமி சர்வதேசப் போட்டிகளுக்கும் தேர்வாகி உள்ளார். மேலும் தற்போது நடைபெற்று வரும் தேசிய தடகளப் போட்டியில் ஆண்கள் 100 மீ பிரிவில் தஞ்சாவூரைச் சேர்ந்த திருச்சி ரயில்வே நிலைய ஊழியர் இலக்கியதாசன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதனால் தேசிய தடகளப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் பதக்கம் வென்று இருப்பது பெருமையாகப் பார்க்கப்படுகிறது.