தென்னிந்தியாவில் மழை நிலவரம்: வெதர்மேன் கூறும் தகவல்

  • IndiaGlitz, [Sunday,August 12 2018]

தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில் கேரளா உள்ளிட்ட ஒருசில மாநிலங்கள் கனமழையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையால் தென்னிந்தியாவில் பெய்யும் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் கேரளா, கர்நாடகா மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள், வால்பாறை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல் அடுத்த வாரம் வரை அதாவது ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை தென்னிந்தியாவின் மேற்கு பகுதி முழுவதும் அதாவது கன்னியாகுமரி முதல் மகாராஷ்டிரா வரையிலான பகுதிகளில் நல்ல மழை பெய்யும். அதேபோல் வங்காள விரிகுடா பகுதிகளான வடக்கு ஆந்திரா , ஒடிசா கடலோர பகுதி மற்றும் குஜராத், தெலுங்கானா ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் வால்பாறை, தேனி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் நெல்லை பகுதியில் கனமழை பெய்யும். இதனால் மூணாறு, குடகு, ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்கவும்.