பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும்! போக்குவரத்து ஊழியர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
- IndiaGlitz, [Tuesday,May 16 2017]
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து நம்பிக்கையுடன் இரவு நேர பேருந்துகளில் ஏற முடியவில்லை என்றும் நடுவழியில் திடீரென போராட்டக்காரர்கள் பேருந்துகளை நிறுத்துவதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த தொடர் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் மதுரை, ஒத்தக்கடையை சேர்ந்த செந்தில் குமரய்யா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் அமர்வு, 'போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், போராட்டம் செய்வது தவறல்ல, ஆனால் தொடர் வேலைநிறுத்தம் செய்வதால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் காரணமாக போக்குவரத்து தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். அப்படி பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நீதிபதிகளின் இந்த உத்தரவை அடுத்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.