சர்வே ரிப்போர்ட்டில் வெற்றி வாகை சூடிய அதிமுக… பரபரப்பு தகவல்!

தமிழகச் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 122 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று ஜனநாயக கூட்டமைப்பு (Democracy Network) மற்றும் உங்கள் குரல் அமைப்பின் கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன. இந்த அமைப்பு தமிழகச் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு உள்ள கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு உள்ளது. இதற்காக மார்ச் 12 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த முடிவுகள் மண்டல வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.

இதில் அதிமுக கூட்டணி கொங்குமண்டல்-40, தொண்டை மண்டலம்-34 உடன் 8, சோழ மண்டலம்-20, பாண்டிய மண்டலம்-20 எனவும் திமுக கூட்டணி – கொங்கு மண்டலம்-28, தொண்டை மண்டலம் 24 உடன் 12, சோழ மண்டலம்-21, பாண்டிய மண்டலம்-26 எனவும் அமமுக கூட்டணி-1 முன்னிலை பெற்று இருக்கின்றன.

மேலும் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் விவசாயியாக பார்ப்பதும் அதிமுக கூட்டணிக்கு அதிக வாக்குகளை பெற்று தருவதாக சர்வே முடிவு கணித்து இருக்கிறது. அதோடு அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாகவும் சர்வே ரிப்போர்ட் கூறியுள்ளது.

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு, தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயர் மாற்றம் ஆகியவை அதிமுக கூட்டணி கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்து இருப்பதாகவும் தொண்டை மண்டலத்தில் கூட்டணி கட்சிகள் பலவும் அதிமுகவிற்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணி வாக்குகளை வெகுவாக பாதிப்படைய செய்யும் எனவும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக 5 முனை போட்டி நிலவி வருகிறது. இத்தகைய கடும் போராட்டத்திற்கு இடையில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் என சர்வே முடிவு தெரிவித்து இருப்பது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.