'விஸ்வாசம்' காட்சியை விளம்பரத்திற்கு பயன்படுத்திய தமிழக காவல்துறை!
- IndiaGlitz, [Tuesday,February 11 2020]
தல அஜித்தின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான ’விஸ்வாசம்’ என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் ரூபாய் 300 கோடி வசூல் செய்ததாகவும், தயாரிப்பாளர் உட்பட அனைத்து தரப்பினரும் மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழக காவல்துறையினர் பெண்களின் பாதுகாப்பு குறித்த செயலி ஒன்றின் விளம்பரத்திற்கு இந்த படத்தின் ஒரு காட்சியை உபயோகப்படுத்தி உள்ளனர், தேனி மாவட்ட காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழக காவல்துறையின் ’காவலன்’ என்ற செயலியின் விளம்பரத்திற்காக ’விஸ்வாசம்’ படத்தின் காட்சியை பயன்படுத்தியுள்ளனர். ’விஸ்வாசம்’ திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருக்கும் சிறுமி கூறும் வசனத்தையும் அதற்கு நயன்தாரா சொல்லும் பதிலையும் வைத்து இந்த செயலியின் விளம்பரம் அமைக்கப்பட்டுள்ளது
‘அம்மா என்னை யாரும் தொரத்துறாங்க’ என்று அந்த சிறுமி கூற அதற்கு நயன்தாரா ’உன் மொபைலில் இருக்கிற காவலன் செயலியை பட்டனை அழுத்து’ என்று கூறுகிறார் உடனே அந்த சிறுமி ’சரி’ என்று சொல்ல அதற்கு அடுத்த நிமிடமே போலீசார் வருவது போலவும் அதற்கு நயன்தாரா ’இனி உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என்று கூறுவது போலவும் இந்த விளம்பரம் அமைக்கப்பட்டுள்ளது
’விஸ்வாசம்’ படத்தின் காட்சியை வைத்து அமைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது மட்டுமின்றி காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு மக்களிடம் நன்றாக போய் சேர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது