கமல் மீது வழக்குப்பதிவு: காவல்துறை எடுத்த அதிரடி முடிவு
- IndiaGlitz, [Monday,October 30 2017]
நிலவேம்பு கசாயம் குறித்து சமீபத்தில் கமல்ஹாசன் பதிவு செய்த டுவீட் ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவராஜன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் 'முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்கு தொடரலாம்' என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் காவல்துறை உயரதிகாரிகள், சட்டநிபுணர்களுடன் கமல் மீது வழக்கு தொடர்வது குறித்து அவசர ஆலோசனை செய்ததாக செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நிலவேம்பு கசாயம் தொடர்பாக கமல் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மனுதாரர் தேவராஜனுக்கு காவல்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:பார்வையில் கண்ட எண்ணின்படி 19.10.2017ஆம் தேதி தாங்கள் கனம் காவல் ஆணையாளர் சென்னை அவர்களிடம் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் நிலவேம்பு குடிநீர் கசாயம் பற்றி மக்களிடையே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் செய்தியை வெளியிட்டுள்ளதாக மனு அளித்திருந்தீர்கள்
தாங்கள் அளித்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்டதில் இதில் குற்ற நடவடிக்கை எடுப்பதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என்பதால் தங்களின் மனுவானது முடிக்கப்படுகிறது. இதுதங்களின் தகவலுக்காக தெரிவிக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.