பொங்கல் விடுமுறை ரத்து. தமிழர்களுக்கு மத்திய அரசின் தொடர் துரோகம்
- IndiaGlitz, [Monday,January 09 2017]
பொங்கல் பண்டிகை என்பது காலங்காலமாக தமிழர்கள் கொண்டாடி வரும் தமிழ் கலாச்சார பண்டிகை. உழவர்களுக்கு நன்றி சொல்லும் விழாவாக ஜாதி, மதம், இன வேறுபாடு இன்றி அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து கொண்டாடப்பட்டு வரும் இந்த பொங்கல் திருவிழாவுக்கு தமிழக அரசு பொங்கல், மாட்டுப்பொங்கல், உழவர் தினம் என மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கும்.
இதேபோல் மத்திய அரசும் கடந்த ஆண்டு வரை பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளித்து வந்தது. ஆனால் இந்த வருடம் திடீரென நாடு முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு அரசு விடுமுறை கட்டாயம் அளிக்க வேண்டியதில்லை என அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழர்களுக்கு மாபெரும் அதிர்ச்சியாக உள்ளது.
ஏற்கனவே பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இந்த தடையை ஒரே ஒரு அவசர சட்டம் இயற்றினால் உடைத்துவிடலாம். ஆனால் அதற்கு மனமில்லாத மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நீலிக்கண்ணீர் வடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது விடுமுறையிலும் கைவைத்துள்ளது கோடானகோடி தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்வதாகவே கருதப்படுகிறது.
பொங்கல் என்பது ஒரு மதப்பண்டிகை இல்லை என்பதை மனதில் வைத்து மீண்டும் பொங்கல் தினத்தில் விடுமுறை என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.