அனிதா மரணம்: அறிவுரைகளுக்கான நேரமா இது?
- IndiaGlitz, [Friday,September 01 2017]
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடித் தோற்ற மாணவி அனிதாவின் மரணம் தமிழக மக்களை அதிர்ச்சியிலும் கடும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த நேரத்தில் சிலர் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற ஒரே தகவலை வைத்துக்கொண்டு தற்கொலைக்கு எதிரான அறிவுரைகளை வழங்கிவருகின்றனர். சிலர் ”மருத்துவக் கல்விக்கான வாய்ப்பு பறிபோனதற்கு ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும், வேறு கல்வி வாய்ப்பே இல்லையா?” என்றெல்லாம் கேள்வி எழுப்பி அனிதாவின் மரணத்தைக் கொச்சைப்படுத்துகின்றனர்.
முதலில் ஒரு விஷயம். தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வல்ல, வாழ்வில் எத்தகு துன்பம் வந்தாலும் அதை எதிகொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும். தோல்விகளைக் கடந்து வெல்வதுதான் அசலான சாதனை. இதையெல்லாம் யாரும் மறுக்கவில்லை. தற்கொலை ஒன்றும் போற்றத்தக்க விஷயமல்ல என்பதும் அனைவருக்கும் தெரியும் ஆனால் இவற்றையெல்லாம் பேச வேண்டிய தருணம் இதுவல்ல.
அனிதாவின் மரணத்துக்காக வெகுண்டெழும் யாரும் அவரது தற்கொலையைப் புனிதப்படுத்தவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நாம் வெகுண்டெழுவது அவரை வாழ்க்கையைத் தொடங்கும் முன்னே அதை அழித்துக்கொள்ள முடிவெடுக்க வைத்த காரணங்களை எதிர்த்துதான்.
நிச்சயமாக அனிதாவின் இந்த கோரமான முடிவுக்கு நீட் தேர்வு, மாநில அரசு, மத்திய அரசு, நீதிமன்றங்கள் ஆகியவை நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருக்கின்றன. குறிப்பாக மாநில அரசுதான் இதில் அதிக பழியை ஏற்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை நீட் தேர்வை மிகத் தீவிரமாக எதிர்த்துவந்தார். அவரது எதிர்ப்புக் குரலால்தான் கடந்த ஆண்டு தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைத்தது. இந்த ஆண்டு ஜெயலலிதா உயிரோடு இல்லை. தற்போதைய ஆட்சியாளர்கள் ஜெயலலிதா அளவுக்கு உறுதியுடனும் சமயோஜிதமாகவும் இந்த விஷயத்தைக் கையாளவில்லை. நீட்டை ஒரு புறம் எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டே மத்திய அரசுக்கு அடிபணிந்துவிட்டனர். அல்லது அடிபணியவைக்கப்பட்டுவிட்டனர். நீட்டிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்க தற்போதைய ஆளும் அதிமுக அரசின் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.
சரி விலக்குதான் பெற முடியவில்லை. விலக்கு கிடைக்காது என்று தெரிந்தபின் மாணவர்களை நீட் தேர்வுக்கு மனரீதியாக தயார்படுத்துவதிலும் பயிற்சி அளிப்பதிலுமாவது இந்த ஒரு ஆண்டு காலத்தில் அரசு கவனம் செலுத்தியிருக்க வேண்டும். பயிற்சியிலும் கவனம் செலுத்தாமல் விலக்கையும் பெறத் தவறி இரண்டுங்கெட்டான் நிலையில் தமிழக மாணவர்களை குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களை தவிக்கவிட்டுவிட்டது தமிழக அரசு.
தமிழகத்தில் மருத்துவ சுகாதார அமைப்பு சிறப்பாக இருப்பதாக உலகளாவிய அமைப்புகளின் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அப்படி இருக்கும்போது இங்கு நீட் போன்ற ஒரு ஒட்டுமொத்த நாட்டுக்கான பொதுத் தேர்வை வைப்பது மாநிலத்தின் மருத்துவ சேவை அமைப்பை சீர்குலைக்கும் என்ற காரணத்தை சொல்லிதான் ஜெயலலிதா தமிழகத்துக்கு நீட்டிலிருந்து விலக்குக் கோரினார். இந்தக் காரணங்களை காதில் போட்டுக்கொள்ளாமல் நீட் தேர்வை தமிழகத்தின் மீது திணித்துவிட்டது மத்திய அரசு. சில வாரங்களுக்கு முன் நீட்டுக்கு விலக்குப் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனால் அவர் அப்படிச் சொல்லி ஒரு சில நாட்களுக்குள் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உசச நீதிமன்றத்தில் சொல்லிவிட்டது மத்திய அரசு.
உச்ச நீதிமன்றமும் தமிழக அரசின், நீட் எதிர்ப்பாளர்களின் வாதங்களை சரியாகக் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்ற விமர்சனம் பலரால் முன்வைக்கப்படுகிறது. அல்லது நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்படி அந்த வாதங்களை முன்வைக்க சரியான வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை.
எனவே இவையெல்லாம் சேர்ந்துதான் அனிதாவின் தற்கொலைக்குக் காரணமாகியிருக்கின்றன. அதைத்தான் எதிர்க்கிறோம்.
இதைத் தவிர நாமெல்லாம் துணிச்சல் பற்றியோ பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழ்வது பற்றியோ அனிதாவுக்கு வகுப்பெடுக்க வேண்டியதில்லை. அவர் வாழ்வு முழுக்க பல பிரச்சனைகளை எதிர்கொண்டு போராடிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்.
தமிழகத்தின் அரியலூர் என்ற சிற்றூரில் ஒரு தினக் கூலித் தொழிலாளியின் மகளாகப் பிறந்தவர் அனிதா. அரசுப் பள்ளியில் பயின்றிருக்கிறார். படிக்கும்போதே காய்கறிகள் விற்று அதன் மூலம் கிடைத்த வருமானத்தில்தான் கல்வி பயின்றிருக்கிறார். இவ்வளவையும் மீறி 12ஆம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். நீட் தகுதித் தேர்வு தமிழகத்துக்குக் கட்டாயமாக்கப்படும் என்று அவருக்குத் தெரியவில்லை. எனவே 12ஆம் வகுப்பில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தனக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கடினமாக உழைத்துப் படித்திருக்கிறார்.
ஆனால் திடீரென்று நீட்டிலிருந்து விலக்கு கிடைக்காது என்ற நிலை உருவாகிறது. அப்போதும் அவர் துவண்டு விடவில்லை. நீட்டுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்கிறார். தனது போராட்டத்தை ஒற்றை ஆளாக உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்றிருக்கிறார். உச்ச நீதிமன்றத்திலும் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. 12ஆம் வகுப்பில் அவர் எடுத்த மதிப்பெண்கள் பயனற்று போய் இருக்கின்றன. நீட் மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வி இடங்கள் நிரப்ப்படும் என்பதால் மருத்துவர் ஆகும் அவரது கனவு தகர்ந்துபோகிறது. இந்தக் கையறுநிலையில்தான் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
எனவே தற்கொலை எதிர்ப்பாளர்களும் நீட் ஆதரவாளர்களும் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பேசுவது அல்லது இந்த நேரத்தில் எதுவும் பேசாமலாவது இருப்பது இறந்த ஆத்மாவுக்கு மரியாதை செய்வதாக இருக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது.
அஞ்சலி கூற வேண்டிய நேரத்தில் அறிவுரை கூறாதீற்கள் கனவான்களே.