ஐபிஎல் போட்டியை நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம்: தமிழக எம்.எல்.ஏ
Send us your feedback to audioarticles@vaarta.com
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஐபிஎல் போட்டியை நடத்தவிடமாட்டோம் என்றும் மீறி நடத்தினால் கிரிக்கெட் வீரர்களை சிறைபிடிப்போம் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான மு.தமீமுன் அன்சாரி கூறியுள்ளார்.
11வது ஐபிஎல் போட்டி வரும் 7ஆம் தேதி முதல் மும்பையில் தொடங்கவுள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கள் ஏற்கனவே விற்பனையாகிவிட்ட நிலையில் தற்போது இந்த போட்டி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. காவிரி பிரச்சனைக்காக போராடி வரும் அரசியல்கட்சிகளின் பார்வை தற்போது சென்னை ஐபிஎல் போட்டியை நிறுத்துவதில் உள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் வருகின்ற 10-ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசிற்கு எதிராக தமிழக மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். விவசாயிகள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கிரிக்கெட் போட்டி ஒரு கேடா? அப்படி நடத்தினால் அது தமிழ்நாட்டிற்கே வெட்கக்கேடு.
உடனடியாக தமிழக அரசு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய வேண்டும், மீறி நடத்தினால் மனிதநேய ஜனநாயகக் கட்சியினரும், காவிரி உரிமை மீட்புக் குழுவினரும் மைதானத்திற்குள் நுழைந்து போட்டியை தடுத்து நிறுத்துவோம். இதை மீறி அங்கு விளையாட வரும் ஐபிஎல் வீரர்களை சிறைபிடிப்போம். தமிழக மக்களின் உணர்வுகளை எல்லோரும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments