அண்ணா கூறியதைத்தான் ரஜினியும் கூறினார்: அதிமுக அமைச்சரும் ஆதரவு
- IndiaGlitz, [Friday,August 16 2019]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது, காஷ்மீர் பிரச்சினை குறித்தும் மோடி - அமித்ஷா குறித்தும் தனது கருத்தை தெரிவித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு பெரும்பாலான அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜகவினர் மட்டுமே ரஜினிக்கு ஆதரவான கருத்தை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் ரஜினி கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை தொடர்பாக ரஜினி கூறிய கருத்தை தான் வரவேற்பதாகவும், இதே கருத்தை நான் கடந்த 1962-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் அண்ணா அவர்கள் கூறியதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்
எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ரஜினி கூறிய கருத்தை தான் வரவேற்கிறேன் என்றும், நாட்டின் பாதுகாப்பை கருதி கடந்த 1962ஆம் ஆண்டு சீன படையெடுப்பின்போது அண்ணா அவர்கள் இதேபோன்ற ஒரு கருத்தை கூறியதாகவும் இந்த கருத்தையே ரஜினிகாந்த் தனது பாணியில் கூறியுள்ளார் என்பதால் அவருடைய கருத்தை தான் வரவேற்பதாகவும் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார்