ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பது ராஜதந்திரம்: தமிழக அமைச்சர்
- IndiaGlitz, [Saturday,March 23 2019]
கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தாம் அரசியலுக்கு வருவது உறுதி என்றார். அதன் பின்னர் ரஜினி மக்கள் மன்றம் தோற்றுவிக்கப்பட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மன்றம் தான் அரசியல் கட்சியாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் ரஜினி தனது மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றுவது எப்போது? என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து எழுந்தது. கட்சி ஆரம்பிப்பதற்கான பணிகள் 90% முடிந்துவிட்டதாகவும், விரைவில் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வரும் என்று ரஜினியே பல பேட்டிகளில் தெரிவித்திருந்தபோதிலும் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை என்பதுதான் உண்மையான நிலவரம்.
இந்த நிலையில் வரும் 2019ஆம் ஆண்டோ அல்லது அதற்கு முன்னரோ தமிழக சட்டமன்றத்திற்கு பொதுத்தேர்தல் வரும்போதுதான் ரஜினி தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் சற்றுமுன் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'ரஜினி இதுவரை அரசியலுக்கு வராமல் இருப்பது ராஜதந்திரமான முடிவு' என்று தெரிவித்தார்.
அரசியலுக்கு அவசரப்பட்டு வந்து, பத்தோடு பதினொன்றான கட்சியாக பல நடிகர்களின் கட்சிகள் இருப்பது போல் இல்லாமல், வந்தால் ஆட்சியை பிடிக்க வேண்டும், அதற்கான தருணத்தில் வரவேண்டும் என்பதே ரஜினியின் திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது.