சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி குறித்து அமைச்சரின் முக்கிய தகவல்!
- IndiaGlitz, [Monday,August 03 2020]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் தற்போது நடைபெற்று வரும் 7வது கட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை தொடரும் என்பதும் தெரிந்ததே.
இருப்பினும் ஆறாம் கட்ட ஊரடங்கு மற்றும் ஏழாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சினிமா படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகள் திறக்க அரசு இன்னும் அனுமதிக்கவில்லை. எனவே செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களிடம் திரையரங்குகளை திறக்கவும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கவும் திரை உலகினர் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ’தற்போதைய சூழ்நிலையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க முடியாது’ என்று அவர் தெரிவித்தார். மேலும் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த உள் அரங்குகள் போதுமானது என்றும் ஆனால் சினிமா படப்பிடிப்புகள் வெளிப்புறத்தில் நடைபெறும் என்பதால் மக்கள் கூட்டம் கூட அதிக வாய்ப்பு உள்ளதால் சினிமா படப்பிடிப்புக்கு இப்போது அனுமதி கிடையாது என்று தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்தால் திரையுலகினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல் திரையரங்குகள் திறக்கவும் இப்போதைக்கு அனுமதி கிடைக்காது என்று கருதப்படுகிறது. இதனால் பல திரைப்படங்கள் ஓடிடியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.