'சர்கார்' வெற்றிக்கு அமைச்சர்கள் பாடுபடுகின்றனர். பழ.கருப்பையா
- IndiaGlitz, [Thursday,November 08 2018]
தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த 6ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை பெற்று சாதனை செய்து கொண்டிருக்கும் நிலையில் வழக்கம்போல் அரசியல்வாதிகள் இந்த படம் குறித்து விமர்சனம் செய்து படத்திற்கு இலவச புரமோஷன் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே இந்த படம் குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் விமர்சனம் செய்த நிலையில் இன்று அமைச்சர் ஜெயகுமாரும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஜெயலலிதா இருக்கும்போது 'சர்கார்' படத்தை எடுத்திருந்தால் வீரத்தைப் பாராட்டி இருப்போம் என்றும் ஜெயலலிதா இல்லாததால் அரசை விமர்சனம் செய்து திரைப்படம் எடுப்பது, நடிகர்களுக்கு குளிர் விட்டுப் போய்விட்டது என்பதையே காட்டுவதாகவும், இந்த படம் கொள்கை, லட்சியங்களை கொண்டதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் ஆனால் தங்களை முன்னிலைப்படுத்த வேண்டுமென்றே அரசை விமர்சனம் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய அரசியல்வாதியும், 'சர்கார்' படத்தின் வில்லன்களில் ஒருவருமான பழ.கருப்பையா 'சர்கார்' திரைப்படம் ஏற்கனவே நல்ல வெற்றியை பெற்று வருவதாகவும், இந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்ற அமைச்சர்கள் பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.