பிரபல தமிழக அரசியல்வாதிக்கு ஆபத்து: சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்
- IndiaGlitz, [Saturday,September 22 2018]
தமிழகத்தின் அடுத்த முதல்வர் கனவில் இருப்பவர்களில் ஒருவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் அரசியல் அமைப்பு ஒன்றின் தலைவியுமான தீபா. இவர் சமீபத்தில் தனது கார் டிரைவரும் தனது அமைப்பின் முக்கிய பிரமுகருமான ராஜா என்பவரை கட்சியில் இருந்து நீக்கினார்.
இந்த நிலையில் தீபாவின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாகவும், அவரை பாதுகாக்கும் பொறுப்பை தன்னிடம் விட வேண்டும் என்றும் டிரைவர் ராஜா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். டிரைவர் ராஜா தனது புகாரில் மேலும் கூறியிருப்பதாவது:
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் மாநில செயலாளராக இருந்து வரும் நான் தீபாவின் குடும்ப நண்பர் என்ற முறையில் அவருக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறேன். கட்சியில் கிளை பதவி முதல் மாவட்ட செயலாளர்கள் பதவிகள் உட்பட அனைத்திற்கும் கடுமையான போட்டி நிலவி வந்தது. கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்த குறிப்பிட்ட சிலர் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் தூண்டுதலில் தீபாவுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர். அதன் காரணமாக அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதன் காரணமாக தீபாவின் கணவரும் கட்சியில் உள்ள சிலரும் என் மீது கோபம் அடைந்தனர். அதன் விளைவாக சமூக வலைதளத்தில் என்னைப்பற்றி தவறான கருத்துகளை பதிவிட்டதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். பேரவை மற்றும் கழகத்தின் எந்த பணிகளையும் செய்ய விடாமல் தடுத்தனர். மேலும் தீபாவிற்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால் எனக்கு பாதுகாப்பு வழங்கவும், தீபாவிற்கு பாதுகாப்பு அறனாக செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு டிரைவர் ராஜா த்னது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.