சென்னை தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து: அதிர்ச்சி காரணம்
- IndiaGlitz, [Saturday,August 01 2020]
சமீபத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் குறித்து ஐ.எம்.ஏ தனது பரிந்துரைகளை தெரிவித்து இருந்தது. அதன்படி லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820 ஆகவும், அதிக பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு 17 நாட்கள் கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயம் சிகிச்சை கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு வசூல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசும் தனியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி பொது வார்டில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 5,000 முதல் 7,000 ரூபாய் கட்டணமும், தீவிர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகளுக்கு தினமும் ரூபாய் 15,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்வதாக ஒருசில தனியார் மருத்துவமனை மீது குற்றஞ்சாட்டப்பட்டு சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு நோயாளி ஒருவரிடம் 19 நாளுக்கு 12.20 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த தனியார் மருத்துவமனை மீது தமிழக சுகாதார துறை நடவடிக்கை எடுத்து கொரோனா சிகிச்சைக்கான அனுமதியை ரத்து செய்துள்ளது. மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி அதிகம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது