மதுரை சலூன் கடைக்காரர் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர்

  • IndiaGlitz, [Saturday,June 06 2020]

மதுரையை சேர்ந்த சலூன்கடைக்காரர் மோகன் என்பவரின் மகள் நேத்ரா என்பவர் தனது எதிர்கால கல்விக்காக தந்தை சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை தனது பகுதியில் ஊரடங்கால் கஷ்டப்படும் ஏழைகளுக்கு செலவு செய்ய தந்தையிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள சுமார் 400 குடும்பங்களுக்கு சலூன் கடைக்காரர் மோகன் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்தார். இந்த செய்தி தமிழகமெங்கும் வைரலானது. மகள் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த மோகனின் இந்த செயலை சமீபத்தில் பிரதமர் மோடியும் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி ஐநாவும் சமீபத்தில் மோகன் மகள் நேத்ராவை கெளரவிக்கும் வகையில் அவருக்கு ஏழைகளுக்கான நல்லெண்ண தூதர் பதவி கொடுத்து, ஒரு லட்ச ரூபாய் பரிசும் கொடுத்தது. இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் மோகன் மகள் நேத்ராவுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு அம்மாவின்‌ அரசு, கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும்‌, நிவாரணப்‌ பணிகளையும்‌ போர்க்கால அடிப்படையில்‌ மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசோடு இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும்‌, தன்னார்வலர்களும்‌ கொரோனா நிவாரணப்‌ பணியில்‌ செயல்பட்டு வருகின்றனர்‌.

இந்நிலையில்‌, மதுரை மாவட்டம்‌, மேலமடை, வண்டியூர்‌ மெயின்‌ ரோடு, முடிதிருத்தகம்‌ நடத்தி வரும்‌ திரு. மோகன்‌ என்பவர்‌, தனது மகள்‌ செல்வி நேத்ராவின்‌ படிப்புக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை தனது மகளின்‌ வேண்டுகோளுக்கிணங்க, ஏழை, எளிய மக்களுக்கு உணவு பொருட்கள்‌ மற்றும்‌ காய்கறிகள்‌ வாங்க செலவிட்டதற்கு, தமிழ்நாட்டு மக்கள்‌ சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

தன்னலம்‌ கருதாமல்‌, அர்ப்பணிப்பு உணர்வுடன்‌ எதிர்கால படிப்பிற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை, ஊரடங்கு காலத்தில்‌, ஏழை, எளிய மக்களுக்கு செலவிட்டதை அங்கீகரிக்கும்‌ வகையில்‌, செல்வி நேத்ராவின்‌ உயர்‌ கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்‌.

செல்வி நேத்ரா அனைத்து வகையிலும்‌ சிறந்து விளங்கி, இதுபோன்ற பற்பல பாராட்டுதல்களையும்‌, அங்கீகாரத்தையும்‌ பெற்று தமிழ்நாட்டிற்கும்‌, இந்தியாவிற்கும்‌ மேலும்‌ பெருமை சேர்த்திட வேண்டும்‌ என இத்தருணத்தில்‌ நான்‌ மனதார வாழ்த்துகிறேன்‌.

இவ்வாறு முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.