சூர்யா-ஜோதிகா விவகாரத்தில் தலையிடும் தமிழக அரசு!
- IndiaGlitz, [Sunday,April 26 2020]
கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனை அடுத்து திரைக்கு வெளியிட தயாராக இருக்கும் ஒரு சில சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் நேரடியாக ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ என்ற திரைப்படம் அமேசான் பிரைமில் வரும் மே மாதம் முதல் வாரம் வெளியாக இருப்பதாகவும் இதுகுறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
சூர்யாவின் இந்த நடவடிக்கைக்கு திரையரங்க உரிமையாளர் தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. சூர்யா மற்றும் ஜோதிகா நடிக்கும் திரைப்படங்கள், அவர்கள் சார்ந்த தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்களை இனி வெளியிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். இருப்பினும் சூர்யா தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ’பாதிக்கப்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் தங்களது கருத்தை கூறியுள்ளதாகவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் இந்த பிரச்சனையில் இரு தரப்பும் பேசித் தீர்க்க வேண்டும் என்றும் இந்த பேச்சுவார்த்தைக்கு அரசு உதவி செய்யும் என்றும் பேச்சுவார்த்தைக்கு பின்னர் முதல்வரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
எனவே கொரோனா பிரச்சினை முடிந்தவுடன் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இது குறித்த பேச்சுவார்த்தையை அரசு முன்னிலையில் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.