பிகில்' படத்திற்கு அதிகாலை காட்சி அனுமதி இல்லையா?
- IndiaGlitz, [Friday,October 18 2019]
கடந்த சில வருடங்களாக முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்கள் மட்டுமன்றி அனைத்து நடிகர்கள் நடித்த படங்களும் அதிகாலை காட்சி திரையிடுவதை திரையரங்கு உரிமையாளர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு வசதியாக இருந்தது.
இந்த நிலையில் வரும் தீபாவளியன்று விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படமும் அதிகாலை காட்சி திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ’பிகில்’ படத்திற்கு அதிகாலை காட்சிக்கான அனுமதியை இன்னும் அரசு வழங்கவில்லை என்று ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது.
இது குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் கூறிய போது ’பொதுவாக அதிகாலை காட்சிக்கு அரசு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அனுமதி அளிக்கும். அந்த வகையில் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசு அனுமதி அளிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மத்திய அரசு தற்போது 24 மணி நேரமும் திரையரங்குகளில் காட்சிகள் ஒளிபரப்பலாம் என்று சட்டம் இயற்றி இருக்கும் நிலையில் அதிகாலை காட்சிக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கும் என்றே நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
’பிகில்’ ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால்தான் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை ஒரு வதந்தி கோலிவுட்டில் பரவி வரும் நிலையில் இந்த வதந்தி உண்மையா? அல்லது அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.