இதுவரை வந்த கொரோனா நிதி எவ்வளவு? செலவு எவ்வளவு? விளக்கமளித்த தமிழக அரசு!
- IndiaGlitz, [Tuesday,May 18 2021]
தமிழகத்தில் சமீபத்தில் முதல்வர் பதவி ஏற்ற முக ஸ்டாலின் அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று திரையுலக பிரமுகர்கள், அரசியல் கட்சிகள், தொழில் அதிபர்கள் ஆகியோரின் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இதுவரை அரசுக்கு வந்துள்ள கொரோனா தடுப்பு நிதி எவ்வளவு? அந்த நிதியில் இருந்து கொரோனா தடுப்பு பணிக்காக செய்த செலவு எவ்வளவு? என்பது குறித்து அரசு தெளிவாக விளக்கம் அளித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மருத்துவ நெருக்கடியும் நிதி நெருக்கடியும் இணைந்து சூழும் இந்த நேரத்தில் மக்களை காக்கும் மகத்தான பணியில் மக்கள் தங்களை தாங்களே முன்வந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஈகையும் இரக்கமும் கருணையும் பரந்த உள்ளமும் கொண்ட தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கைகொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மே 11ஆம் தேதி வேண்டுகோள் விடுத்தார்கள்.
இவ்வாறு வழங்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். மே 17ஆம் தேதி வரை இணைய வழி மூலமாக 29.44 கோடி ரூபாயும், நேரடியாக 39.56 கோடி ரூபாயும் என மொத்தமாக 69 கோடி ரூபாய் நிவாரண நிதியாக பெறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று கொரோனா மருத்துவ சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மனமுவந்து நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாக மனமார்ந்த நன்றியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் கொடைகள் கொரோனா நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்த வாறு இதுவரை தரப்பட்டுள்ள 69 கோடி ரூபாயிலிருந்து ரெம்டெசிவர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காக 25 கோடி ரூபாயும், மற்ற மாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜனை ரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்கு தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காக 25 கோடி ரூபாயும் என முதற்கட்டமாக மொத்தம் 50 கோடி ரூபாய் தொகையை செலவிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்துள்ளார்கள்”
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.