ரூ.7500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள்: தமிழக அரசு அதிரடி ஆணை
- IndiaGlitz, [Thursday,January 24 2019]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கடந்த மூன்று நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருவதால் அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வரும் 25ஆம் தேதிக்குள் வேலைநிறுத்தத்தை வாபஸ் செய்துவிட்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டபோதிலும் நீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
இதனையடுத்து ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியீட்டுள்ளது. இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
பொதுத்தேர்வுகள் நெருங்கி வருவதால் ஆசிரியர்களின் போராட்டமானது மாணவர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே அவர்களுக்கு பதிலாக ரூ.7500 தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தேர்வு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பணி விதிமுறை எண் 18பி - ன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்கள் மீது ஊதிய பிடித்தம் அல்லது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியீடு.
— AIADMK (@AIADMKOfficial) January 24, 2019