குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளருக்கு தமிழக அரசு நோட்டீஸ்? காவல்துறை நடவடிக்கையா?

  • IndiaGlitz, [Tuesday,May 21 2024]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யூடியூபர் இர்பான் தனது சமூக வலைத்தளத்தில் தனக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்ததாக கூறிய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருத்துவ துறை முடிவு செய்திருப்பதாகவும் இதையடுத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யூடியூபர் இர்பான் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது மனைவி கர்ப்பமானார். இதையடுத்து அவர் தனது மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவதற்காக துபாய் சென்றதாகவும் அங்கு அவர் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்து ஒரு பார்ட்டி வைத்ததாகவும் தெரிகிறது.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இந்தியாவில் தான் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது சட்டவிரோதம் என்ற நிலையில் அவர் துபாயில் அதை அறிந்து கொண்டதால் அவர் மீது நடவடிக்கை இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் இர்பான் அறிவித்ததை அடுத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத் துறை முடிவு செய்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இர்பான் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.