நீட் வினாத்தாள் தமிழ் மொழிபெயர்ப்பு தவறுக்கு தமிழக அரசே காரணம்: சி.பி.எஸ்.இ
- IndiaGlitz, [Thursday,July 19 2018]
சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாளின் தமிழ் பதிப்பில் மொழிபெயர்ப்பு தவறுகள் இருந்ததாகவும், இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில் தமிழக நீட் மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்கள் தர மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.எஸ்.இ, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவில் நீட் தேர்வு வினாத்தாள் தமிழ் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட தவறுக்கு தமிழக அரசே காரணம் என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
நீட் விவகாரத்தில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் என்றும், தமிழக அரசு பரிந்துரை செய்த மொழி பெயர்ப்பாளர்கள்தான் நீட் வினாத்தாளை தமிழில் மொழி பெயர்ப்பு செய்ததாகவும் சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் மதுரை ஐகோர்ட் தீர்ப்பின்படி தமிழக மாணவர்களுக்கு கிடைத்த 196 மதிப்பெண்களுக்கு ஆபத்து வருமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது