விஜய்யின் ரோல்ஸ்ராய் கார் வரி வழக்கு: தமிழக அரசு நீதிமன்றத்தில் முக்கிய தகவல்!

  • IndiaGlitz, [Thursday,September 16 2021]

தளபதி விஜய்யின் ரோல்ஸ் இறக்குமதி கார் வழக்கு குறித்து தமிழக அரசு முக்கிய தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

தளபதி விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் என்ற காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு இறக்குமதி வரியை அவர் ஏற்கனவே செலுத்திய நிலையில் நுழைவு வரி விதிக்கப்பட்டதை அடுத்து இந்த வரிக்கு தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது

ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, விஜய் போன்ற ஹீரோக்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும் என்று கூறியதோடு, விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்

இந்த அபராத உத்தரவை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கில் விஜய்க்கு விதிக்கப்பட்டிருந்த ரூபாய் ஒரு லட்சம் அபராதத்திற்கு தடை விதிப்பதாகவும் அறிவித்திருந்தது ஆனால் விஜய் ஏற்கனவே செலுத்திய 20% போக மீதமுள்ள 80 சதவீத வரியை உடனே செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி விஜய் 80 சதவீத வரியை செலுத்தி விட்டார்

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது விஜய் செலுத்த வேண்டிய வரியை முழுமையாக செலுத்தி விட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை விஜய் தரப்பும் உறுதி செய்ததை அடுத்து இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.