தமிழக அரசின் புதிய உத்தரவால் தியேட்டர் கட்டணங்கள் மீண்டும் உயர்வா?
- IndiaGlitz, [Friday,September 28 2018]
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்கு கட்டணங்கள் உயர்ந்ததால் சினிமா ரசிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். சென்னையில் ரூ.120 என்று இருந்த டிக்கெட்டின் விலை தற்போது ரூ200 வரை உயர்ந்துவிட்டது. இதனால் ஒரு குடும்பத்தினர் ஒரு படம் பார்க்க ரூ.1000 வரை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் கடந்த ஜூலை மாதம் முதல் ஆன்லைன் கட்டணம் குறையும் என விஷால் அறிவித்திருந்தார். ஜூலை மாதம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ஆன்லைன் கட்டணம் குறைந்தபாடில்லை
இந்த நிலையில் தமிழக அரசு திரையரங்குகள் பராமரிப்பு கட்டணத்தை தற்போது திடீரென உயர்த்தியுள்ளது. ஏசி திரையரங்குகளுக்கு ரூ.4ம் ஏசி அல்லாத திரையரங்குகளுக்கு ரூ.2ம் உயர்த்தப்பட்டுள்ளதால் இதன் தாக்கம் டிக்கெட்டின் விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிக்கெட் கட்டணம் ரூ.3 வரை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்ட நிலையில் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே இருப்பது அந்த துறைக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.