சத்யராஜ் மகளின் புரட்சி திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்
- IndiaGlitz, [Thursday,January 24 2019]
புரட்சி தமிழன் சத்யராஜ் அவர்களின் மகள் 'அட்சய பாத்திரம்' என்ற அமைப்பை நடத்தி ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை அளிக்கும் சமூக சேவையை செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழக அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே மதியம் சத்துணவை அரசு வழங்கி வரும் நிலையில் காலையில் ஊட்டசத்து உணவை அளிக்க திவ்யா திட்டமிட்டார். இதற்காக அவர் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களை சந்தித்து தனது திட்டம் குறித்து விளக்கினார். தற்போது திவ்யாவின் இந்த புரட்சிகரமான திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது.
எனவே வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ராகியினால் செய்யப்பட்ட உணவும், ராகி கலந்த பாலும் காலை உணவாக இலவசமாக வழங்கப்படும் என்றும், குழந்தைகளின் உடல்நலத்திற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது என்ற நோக்கில் 'அட்சயப் பாத்திரம்' அறக்கட்டளை மூலமாக இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாகவும் திவ்யா தெரிவித்துள்ளார்.