டாஸ்மாக் கடை மூடப்பட்ட விவகாரம்: தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை
- IndiaGlitz, [Saturday,May 09 2020]
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த இரண்டு மாதங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் மத்திய அரசு அனுமதித்த தளர்வின் அடிப்படையில் ஒருசில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன
அந்த வகையில் கடந்த 7ஆம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் சென்னை தவிர பிற இடங்களில் திறக்கப்பட்டன என்பது தெரிந்ததே. முதல் நாளில் 150 கோடி ரூபாய்க்கும் இரண்டாவது நாளில் 126 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன,
இதனை அடுத்து திடீரென நேற்று மாலை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்பதால் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தனிமனித இடைவெளியை கடைபிடித்து தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே தமிழகத்தில் மதுக் கடைகள் திறக்கப்படுமா? அல்லது ஊரடங்கு வரை மூடப்படுமா? என்பது தெரியும்