தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு
- IndiaGlitz, [Monday,April 13 2020]
கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக தீவிரமாக பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது
இந்த நிலையில் இந்தியாவின் ஒருசில மாநிலங்களிலும் குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தமிழகத்தில் மட்டும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வராதது ஏன் என்ற கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுப்பியிருந்தனர்
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்க உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார். இதனை அடுத்து தமிழகத்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு உறுதியாகி உள்ளது
மேலும் ஊரடங்கு நீட்டிப்பதை அடுத்து ரேஷன் கார்டுகளுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலை இல்லாமல் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதில் ஒரு கிலோ, சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் அரிசி ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் குடும்பத்திற்கு இரண்டாவது முறையாக ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்