சின்னத்திரை படப்பிடிப்பு: தமிழக முதல்வரின் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக சின்னத்திரை மற்றும் பெரியதிரை படப்பிடிப்புகள் முடங்கியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளுக்கு அனுமதி அளித்தது. அதனை அடுத்து சின்னத்திரை படப்பிடிப்புக்கும் தமிழக அரசு அனுமதி அளித்தது. இருப்பினும் சின்னத்திரை படப்பிடிப்பில் 20 பேர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு நிபந்தனை விதித்திருந்தது.

இந்த நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகளில் 20 பேரை வைத்துக்கொண்டு படப்பிடிப்பு நடத்த முடியாது எனவும், குறைந்தபட்சம் 50 பேர்களையாவது அனுமதிக்க வேண்டும் என்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்து தக்க முடிவு எடுக்கப்படும் என சமீபத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சின்னத்திரை படப்ப்பிடிப்பை அதிகபட்சமாக 60 பேர்கள் கொண்டு நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளார். சின்னத்திரை படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப பணியாளர்கள் என மொத்தம் 60 பேர் கொண்டு படப்பிடிப்பை நடத்த அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அதே போல் பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்த அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் ஒவ்வொரு சின்ன தொடரின் படப்பிடிப்புக்கும் ஒரு முறை மட்டுமே அனுமதி பெற்றால் போதுமானது என்றும் முதல்வர் கூறியுள்ளார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை அடுத்து அதிகபட்சமாக 60 நபர்களுடன் நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சின்னத்திரை படப்பிடிப்பை அடுத்து பெரியதிரை படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கோலிவுட் திரையுலகினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.