ஜெயலலிதா, சசிகலா சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை
- IndiaGlitz, [Tuesday,May 30 2017]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நால்வரும் குற்றவாளிகள் என்ற தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதில் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் அவர் தண்டனையில் இருந்து மட்டும் விடுபட்டார். மீதி மூவரும் தற்போது பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா தண்டனையில் இருந்து விடுபட்டாலும் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் விடுபடவில்லை. எனவே ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதம், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விதிக்கப்பட்ட தலா ரூ.10 கோடி அபராதத்தையும் வசூலிக்க அவர்களின் சொத்துகளைப் பறிமுதல்செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணியை தொடங்கியுள்ளது
முதல்கட்டமாக தமிழக ஊழல் கண்காணிப்பு இயக்கம், குற்றவாளிகளான நால்வருக்கும் தமிழகத்தில் இருக்கக் கூடிய 68 சொத்துகளை கணக்கெடுத்து, அவற்றை பறிமுதல் செய்யுமாறு சென்னை, திருவள்ளூர் ஆகிய 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் சொத்துக்களை பறிமுதல் செய்தவுடன் இதுகுறித்த தகவலை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
பறிமுதல் செய்ய வேண்டிய சொத்துக்களில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான லெக்ஸ் பிராப்பர்ட்டி டெவலப் மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், ராமராஜ் அக்ரி ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், சிக்னோரா பிசினஸ் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், ரிவர்வே அக்ரோ பிராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சொத்துகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.