கட்சிக் கூட்டணியைவிட பொதுமக்களின் நலன் முக்கியம்… விநாயகர் சதுர்த்தி விழா குறித்து தமிழக முதல்வரின் அதிரடி முடிவு!!!

 

இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்புக்காக கடந்த மார்ச் 23 இரவு முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதில் பல்வேறு விதிமுறைகள் தளர்த்தப்பட்டாலும் பொது இடங்களிலும் நடைபெறும் விழாக்கள் மற்றும் வழிபாடுகளுக்குத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் மத்திய அரசின் தேசிய பேரிடர் சட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்த விதிகளின்படி பொதுநிகழ்ச்சிகள், பொது வழிபாட்டு தளங்களின் திறப்புக்கு மத்திய அரசின் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு, மத்திய அரசின் தேசிய பேரிடர் சட்ட விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வருகிற விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்ட் 2) வழிபாட்டை பொது இடங்களில் சிலை வைத்துக் கொண்டாடுவதற்கு பலரும் விருப்பம் தெரிவித்து தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர் அந்தக் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பொது இடங்களில் வழிபாடு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவரவர் வீடுகளில் வழிபாடுகளை நடத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

இந்த அறிவிப்புக்கு தமிழகத்தின் முக்கிய பாஜக பிரமுகரான ஹெச். ராஜா கடுயைமான விமர்சனத்தை தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருடைய கருத்துகளுக்கு பதில் அளித்த அதிமுகவின் ஐடி விங், ஹெச். ராஜா அவர்கள் வெளியிட்ட கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் இதனால் பாரதிய ஜனதா கட்சியுடன் தங்களுக்கு இருக்கும் நட்பில் எந்தவித விரிசலும் ஏற்படாது எனவும் விளக்கம் அளித்து இருக்கிறது. அதேபோல் முதல்வரின் அறிவிப்புக்கு தமிழக பாஜகவின் தலைவர் முருகனும் கடுயைமான எதிர்ப்பினைத் தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் கொரோனா பரவல் காலத்தில் மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் அதிரடி முடிவு எடுத்து இருப்பதாகப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “29.07.2020 இல் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின் படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா நோய்த்தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும் பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு ஏற்கனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிமன்றமும் அரசின் ஆணையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என ஆணையிட்டுள்ளது. எனவே மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றி, கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கம் பொருட்டு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.