ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியீடு: சீல் வைத்தார் கலெக்டர்
- IndiaGlitz, [Monday,May 28 2018]
தூத்துகுடி மக்களின் நெடுநாளைய போராட்டம் வெற்றி காணும் வகையில் இன்று தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டுள்ளது.
நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தூத்துகுடிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறும்போது 'ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர்.
அந்த வகையில் இன்று பிற்பகல் சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓபிஎஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு சற்றுமுன்னர் அரசாணை வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக, இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தூத்துகுடி மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
தமிழக அரசின் இந்த அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துகுடி கலெக்டர் சீல வைத்தார். இதனையடுத்து அந்த பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இதுகுறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருவதால் இது நிரந்தர தீர்வு என்று கருதமுடியாது.