24 மணி நேரமும் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி: தியேட்டருக்கு பொருந்துமா?
- IndiaGlitz, [Wednesday,June 08 2022]
தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதி என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களை தற்போது பார்ப்போம்.
தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு அரசு இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தாலும், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்பட ஒருசில காரணங்களால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் தற்போது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அள்த்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் ஏற்கனவே இதுகுறித்த சட்ட மசோதாவை 2016ஆம் ஆண்டு இயற்றி இருந்தது. அதன்படி சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை 24 மணி நேரமும் திறப்பதற்கு அனுமதி அளித்திருந்தது.
ஆனால் தமிழகத்தில் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் 24 மணி நேரம் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தியேட்டருக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடைமுறை ஜூன் 5-ஆம் தேதி அமலுக்கு வரும் என்றும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த நடைமுறை அமலில் இருக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாரத்தில் ஒரு நாள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், பெண்களை இரவு நேரத்தில் பணியில் அமர்த்தக் கூடாது போன்ற விதிமுறைகளுடன் இந்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.