பாதகமான கருத்துக் கணிப்பு பற்றி ஒரு கவலையும் இல்ல… முதல்வர் பதிலடி!
- IndiaGlitz, [Wednesday,March 10 2021]
வரும் தமிழகச் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பல்வேறு கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அப்படியொரு கருத்துக் கணிப்பில் திமுக 154 இடங்களிலும் அதிமுக 65 இடங்களிலும் வெற்றிபெறும் என சர்வே முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இந்தச் சர்வே முடிவு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அந்தக் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தக் கருத்துக் கணிப்புகளில் வெளியாகும் சாதக, பாதகம் பற்றி ஒரு கவலையும் இல்லை. அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இந்த நலத் திட்டங்களினால் பொது மக்கள் பலரும் பலன் அடைந்து உள்ளனர். மேலும் விவசாயிகளுக்கு ஏற்றதாகவும் ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்கும் அரசாங்கமாகவும் அதிமுக செயல்பட்டு வருகிறது.
இதனால் களத்தில் இறங்கி அதிமுக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சர்வே முடிவுகளுக்கு இங்கு வேலையே இல்லை. முன்னதாக விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக அபார வெற்றிப் பெற்றுள்ளது. அதிமுக மீது மக்கள் வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு இதுவே ஒரு பெரிய சான்று என தமிழக முதல்வர் அதிரடியாக பதில் அளித்தார். தமிழக முதல்வரின் இந்த பதில் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
மேலும் இந்தக் கருத்துக் கணிப்பு குறித்து கருத்து தெரிவித்த சில தொண்டர்கள் அதிமுக விவசாயிகளின் நலனுக்காக செயல் திட்டங்களை அமல் படுத்தி இருக்கிறது. அதோடு கொரோனா, பேரிடர் காலங்களில் மக்களுக்கு பக்கபலமாக செயல்பட்டு இருக்கிறது. இத்தகைய பணிகள் அதிமுகவிற்கான ஆதரவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது என்றும் விளக்கம் அளித்து உள்ளனர்.