தேர்தல் துளிகள்: 23 மார்ச் 2021
- IndiaGlitz, [Tuesday,March 23 2021]
பெட்ரோல்-டீசல் விலையுயர்வை குறித்து பேச வேண்டாம்- நடிகை கவுதமி!
புதுசேரி சட்டமன்றத் தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காரைக்காலில் நடிகை கவுதமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், கேஸ், பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு பாஜக பொறுப்பல்ல. மத்திய அரசு மட்டும் காரணம் அல்ல, மாநில அரசுகளுக்கும் பொறுப்பு உள்ளது. இதுகுறித்து பொருளாதாரம் மற்றும் நிதித்துறை சார்ந்தவர்களுடன் கலந்து பேசினால் தெளிவு கிடைக்கும். அதுபற்றி இப்போது பேச வேண்டியதில்லை. மக்களுக்கு எல்லாம் புரிந்துவிட்டது” எனத் தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் பென்ஜமினுக்காக நகைச்சுவை நடிகர்கள் தேர்தல் பிரச்சாரம்!
மதுரவாயல் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் காணும் அமைச்சர் பென்ஜமினுக்கு ஆதரவாக நகைச்சுவை பிரபலங்களான கிங்காங் மற்றும் போண்டா மணி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஊரகத் தொழில் அமைச்சராக இருந்து வரும் பென்ஜமின் வரப்போகும் சட்டப் பேரவை தேர்தலுக்காக மதுரவாயல் தொகுதியில் நிற்கிறார். இவருக்கு ஆதரவாக காமெடி நடிகர்களான கிங்காங் மற்றும் போண்டா மணி இருவரும் மதுரவாயல் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
வாக்காளர்களுக்கு முகக்கவசம் அணிவிக்கும் எம்எல்ஏ வேட்பாளர்!
விருகம்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்எல்ஏ வேட்பாளர் பிரபாகர் ராஜா. இவர் தனது தொகுதியில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் வீதி வீதியாகச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தான் போகும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் முகக்கவசங்களை அணிந்து உள்ளனரா என்பதையும் தவறாது கவனித்து வருகிறார். அப்படி அணியாமல் இருக்கும் பொது மக்களுக்கு தானாகவே சென்று அவர்களுக்கு முகக்கவசத்தை அணிவித்து வாக்குச் சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது செய்கையை கவனித்த பொதுமக்கள் பலரும் மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர்.
திமுக –சிஏஏ, என்ஆர்சி சட்டம் குறித்து!
திமுக ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டங்களை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். நேற்று சென்னை ராயபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் சிஏஏ, என்ஆர்சி குறித்து தமிழகத்தின் உரிமையை அதிமுக அரசு அடகு வைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார். இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டு வந்தவர்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்றும் பேசினார். மேலும் திமுக ஆட்சிக்கு வரும்போது தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடமில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஓபிஎஸ்-ஐ எதிர்க்கும் தங்கதமிழ்ச்செல்வன் கருத்து!
ஓ.பன்னீர் செல்வத்தின் கோட்டையாகக் கருதப்படும் தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தொகுதியில் அவரை எதிர்த்து திமுக சார்பாக தங்கதமிழ்ச்செல்வன் நிற்கிறார். இவர் வாக்கு சேகரிப்பின் போது, அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. நியூட்ரினோ திட்டம் தமிழகத்திற்கு வராது என உறுதியளித்த ஓ.பன்னீர்செல்வமே இத்திட்டத்திற்கு அனுமதியும் அளித்தார். தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. எனவே திமுக ஆட்சிக்கு வந்ததும் நியூட்ரினோ திட்டம் நிறுத்தப்படும். மேலும் கொட்டகுடி ஆற்றின் மேலே அணை கட்ட நடிவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் இப்பகுதியின் குடிநீர் சிக்கல் தீரும் எனவும் தெரிவித்து உள்ளார்.