தேர்தல் துளிகள்: 16 மார்ச் 2021
- IndiaGlitz, [Tuesday,March 16 2021]
அதிமுக எம்.எல்.ஏ அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!
பண்ருட்டி தொகுதி அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ சத்யா பன்னீர் செல்வம் தனக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாததை அடுத்து அதிருப்தி அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது பண்ருட்டி தொகுதிக்கு அதிமுக சார்பில் சொரந்தூர் ராஜேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த சத்யா பன்னீர்செல்வம், “நானும் எனது கணவரும் அரசியலில் இருந்து விலகுகிறோம்” என அறிவித்து இருப்பது அரசியல் களத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹெலிகாப்டர் மூலம் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற கமல்ஹாசன்!
இதுவரை தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் அரசியல் தலைவர்கள் பலரும் ரயில், கார், ஏன் பேருந்துகளைக் கூட சில சமயங்களில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசியலில் முதல்முறையாக மநீம கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஹெலிகாப்டர் மற்றும் தனி விமானங்களை பயன்படுத்தி வருகிறார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற நடிகர் கமல்ஹாசன் ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்து இருந்தார். அன்று பிரச்சாரத்தை முடித்து கொண்டு இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால் அடுத்தநாள் ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு திரும்பினார். அதேபோல கோவை-சென்னைக்கு விமானப் போக்குவரத்து இருந்தாலும் தனி விமானத்தை அவர் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சீமான் உள்ளிட்ட பலரும் விமர்சனம் வைத்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த நடிகர் கமல்ஹாசன், “நான் எப்படி ஆடுகிறேன் என்பதை பார்க்காதீர்கள் பந்து எங்கே போய் விழுகிறது” என்று பாருங்கள் எனத் தெரிவித்து இருந்தார்.
வேட்புமனுவில் உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு?
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார். சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்து இருந்தார். அந்த வேட்புமனுவில் 22 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும் 6 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் தனக்கு கடன் ஏதும் இல்லை என குறிப்பிட்ட அவர் டெல்டா மாவட்டம் மற்றும் சென்னையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டு உள்ளார்.